இந்தியாவின் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை சேர்ந்த தம்பதியருக்கு பிறந்த பெண் குழந்தை அணு முகர்ஜி. சிறு வயதிலேயே சாலை விபத்தில் பெற்றோரை இழந்த அணு உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார்.
அணுவுக்கு 10 வயதான போது அவரை பள்ளியை விட்டு நிறுத்திவிட்ட உறவினர்கள் ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கும்படி வற்புறுத்தினர். எனவே ஒரு தையல் மிஷினை வாங்கி போட்டு கூலிக்கு துணிகளை தைத்து தன்மானத்துடன் வாழ முயற்சித்தார்.
ஆனால் அதில் கிடைத்த வருமானம் கைக்கு எட்டினாலும் வாய்க்கு எட்டவில்லை என்றிருந்தது. பள்ளி செல்லும் தம்பியை படிக்க வைக்க வேண்டிய கடமையும் அணுவுக்கு இருந்ததால் தோழிகளின் அறிவுரையின்படி டெல்லி ஜனநகர் பகுதியில் உள்ள பாரில் டான்சராக வேலையில் சேர்ந்தார்.
தனது நடன கலையின் மூலம் ஏராளமான இரசிகர்களை கவர்ந்து சுமார் 10 ஆண்டு காலம் அந்த ஹோட்டலின் முடிசூடா ராணியாக வலம் வந்தார். எல்லா தொழிலிலும் இருக்கும் போட்டி, பொறாமை பார் டான்ஸ் தொழிலிலும் நிறையவே இருந்தது.
அணுவின் செல்வாக்கு, வளர்ச்சி, இரசிகர் பட்டாளத்தை கண்டு அதே ஹோட்டலில் நடனமாடும் சக டான்ஸர் மீனா கான் என்ற பெண்ணின் மனதில் பொறாமை தீயை மூட்டியது.
19-12-2004 அன்று ஹோட்டலுக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறப்போன அணுவின் முகத்தில் மீனாவின் சகோதரன் அசிட்டை ஊற்றினான். துடிதுடித்து சுருண்டு விழுந்து கதறிய அவரை அக்கம்பக்கத்தினர் தூக்கிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
15 இலட்சம் ரூபாய் வரை செலவழித்து 8 ஆபரேஷன்கள் செய்த பின்னரும் விகாரமாக மாறிப்போன அவரது முகம் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இந்த முகத்துடன் வெளியே தலைகாட்ட விரும்பாத அவர் வீட்டினுள்ளேயே முடங்கி கிடக்க நேரிட்டது.
குடும்ப கஷ்டத்தை போக்க அணுவின் தம்பி வேலைக்கு போய்கொண்டு வந்து தந்த சொற்ப சம்பளத்தில் அவர்களின் வாழ்க்கை நகர்ந்தது.
இதற்கிடையே அழகும் இளமையும் வசீகரமும் இருந்த வரை மலரை மொய்க்கும் வண்டாக அணுவை சுற்றிச்சுற்றி வந்து காதலித்து திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி தந்த ஒருவன் அணுவின் நிலையை கண்டு நைசாக உருவிக்கொண்டான்.
முகம் வெந்தபோது அடைந்ததைவிட உயிருக்குயிராக காதலித்தவன் உதறி விட்ட போனதை எண்ணி இரட்டிப்பு வலியையும் வேதனையையும் அனுபவித்த அவர் நடைப்பிணமாகவே ஆகிப் போனார்.
இதற்கிடையே அசிட் வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீனாவுக்கும் அவரது சகோதரருக்கும் 2011-ம் ஆண்டில் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, டெல்லி குடிசைப் பகுதியில் வசித்து வரும் அணுவின் அவல வாழ்க்கை பற்றிய செய்தி தொகுப்பு 2 மாதங்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது.
அந்த நிகழ்ச்சியை பார்த்த இலட்சக்கணக்கானவர்களில் உச்ச நீதிமன்றத்தில் அசிட் வீச்சு வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி குரியன் ஜோசப்பும் ஒருவர்.
அணுவின் கதையை அறிந்து மனம் உருகிப்போன அந்த நீதியரசர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவருக்கு உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கும்படி உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு பரிந்துரை செய்துள்ளார்.
ஒரு நீதிபதியாக இல்லாமல் சராசரி மனிதனாக அந்த பெண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அணுவின் இடத்தில் எனது மகளோ, சகோதரியோ இருந்தால் என்ன செய்வேனோ அதையே தான் நான் அணுவுக்கும் செய்துள்ளேன் என்று மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் கூறுகிறார் நீதிபதி குரியன் ஜோசப்.
பணி நியமன ஆணை விரைவில் கையில் கிடைத்ததும் தனது 10 ஆண்டு இருண்ட வாழ்க்கையில் இருந்து அணு விடுபட வழி வகுத்த நீதிபதியை நல்ல உள்ளம் கொண்டவர்கள் பாராட்டாமல் இருக்க முடியாது.





