வவுனியாவில் சுனாமி நினைவு தினத்தில் வானவேடிக்கையுடன் மாவட்ட செயலகத்தில் கொண்டாட்டம் : மக்கள் விசனம்!!

408

 

மக்கள் விசனம்

இலங்கையில் சுனாமி பேரலை அனர்த்தத்தின் இன மத பேதமின்றி மனித உயிர்கள் காவுகொள்ளப்பட்ட 14 ஆம் ஆண்டு நினைவு தினம் இலங்கை ரீதியில் நேற்று முன்தினம் (26.12) அன்று அனுஷ்டிக்கப்பட்ட வேளையில் அன்றையதினம் மாலை 6 மணிக்கு வவுனியா மாவட்ட செயலகத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஊழியர்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் வானவேடிக்கை மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடிய சம்பவம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் சுனாமி பேரலை நினைவு தினமானது ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்ற கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர்.

கடந்த வாரத்தில் வடக்கில் கடும் மழையுடன் கூடிய வெள்ளத்தின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து நலன்புரி நிலையங்களில் அகதிகளாக அவலப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வவுனியா மாவட்ட செயலகமானது இவ்வாறான ஒரு தினத்தில் வானவேடிக்கையுடன் ஊழியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வை நடத்தியிருந்தமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகமானது எதிர்வரும் காலங்களிலாவது அனர்த்த நினைவு தினங்களில் கொண்டாட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யாமல் வேறு தினங்களில் நிகழ்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர். அத்துடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அன்றையதினம் (26.12) காலை 9.15 மணிக்கு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.