வவுனியாவில் விவசாயியின் மகன் மாவட்ட ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை!!

653

 

மாணவர்களின் விருப்பத்தின்படி படிக்கவிட்டால் சாதிக்க முடியும் : வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் து.யுவதீஸ்வரன்..

மாணவர்களின் விருப்பத்தின்படி அவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க விட்டால் நிச்சயமாக சாதிக்க முடியும் என வவுனியா மாவட்டத்தில் வணிக்கப் பிரிவில் முதலிடம் பெற்ற வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் துரைராஜ் யுவதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3A சித்திகளைப் பெற்று வணிகத் துறையில் மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 143 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், எமது கிராமம் ஓரு பின்தங்கிய கிராமம். எமது குடும்பமும் ஓர் விவசாய குடும்பம். இந்த நிலையில் எனக்கு தரம் 10 இல் இருந்தே வர்த்தகப் பாடம் பிடிக்கும். எனது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்றைப் பார்த்த பலரும் கணிதம் அல்லது விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்குமாறு வற்புறுத்தினர். ஆனாலும் நான் எனது விருப்பப்படி வர்த்தகப் பிரிவில் கல்வி கற்று இன்று மாவட்டத்தில் முதல்நிலை பெற்றுள்ளேன்.

எம்மைப் போன்ற பின்தங்கிய கிராமத்தில் இருந்து சாதிக்க முடியும் என்கின்ற போது வசதி வாய்ப்புக்கள் உள்ள இடங்களில் இருப்பவர்கள் இன்னும் சாதிக்க முடியும். எல்லோரும் கணிதப்பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என்று செல்லாது வர்த்தகப்பிரிவிலும் கல்வி கற்று இன்னும் சிறந்த சாதனைகளை பெறவேண்டும்.

நான் இந்த நிலையை அடைய வழிகாட்டிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்தார். இவர் மென்மேலும் சாதனைகள் படைக்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.