வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் இந்த வருடம் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் அவர்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
இவ் விழாவில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்வி அமைச்சர் கௌரவ த.குருகுலராஜா அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.அன்ரன் சோமராசா அவர்களும் கௌரவ விருந்தினர்களாக த.சந்திரமோகன் (உதவி தவிசாளர் – செட்டிகுளம் பிரதேச சபை), என்.கமலதாசன்( பிரதேச செயலாளர் -செட்டிகுளம்) அவர்களும் கலந்துகொண்டனர்.
வட மாகாண கல்வி அமைச்சர் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் இருவரும் உரையாற்றும்போது இப் பாடசாலை கடந்தகாலத்துடன் ஒப்பிடும் போது மிகக் குறுகியகாலத்தில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது என சுட்டிக்காட்டினர். மேலும் பாடசாலையின் வளர்ச்சியில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் பங்கினையும் பாராட்டினர்.
மேலும் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினர். தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்சிகளும் நடைபெற்றன.













