வவுனியாவில் நள்ளிரவில் பதற்றம் : ஒன்றுகூடிய இளைஞர்கள்!!

942

வவுனியாவில் இன்று நள்ளிரவு பொலிஸாரின் செயற்பாட்டால் நபர் ஒருவர் குடியிருப்பு குளத்தில் வீழ்ந்ததன் காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் குளக்கட்டு பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரத்தில் அமைந்துள்ள நிலையத்தில் நேற்றையதினம் (30.12.2018) இரவு 9.30 மணியளவில் இருவர் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ளனர்.

இவர்கள் மதுபோதையில் பயணிப்பதனை அவதானித்த போக்குவரத்துப் பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், குறித்த இரு இளைஞர்களும் பொலிஸாரின் கட்டளையைத் தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும்போது பொலிஸாரின் மோட்டார் சைக்கில் அவர்கள் மீது மோதி அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.

மற்றுமொருவர் குளக்கட்டின்மீது விழுந்த நிலையில் அவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். எனினும் குளத்திற்குள் வீழ்ந்தவரை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடவில்லை.

இதன் காரணமாக குளத்திற்குள் வீழ்ந்த இளைஞர் குளத்தின் ஆழத்திற்குச் சென்றுள்ள நிலையில் அவரை மீட்கும் பணியில் அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ஆனாலும் இரவு நேரம் என்பதினால் அந்த முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.

குளக்கட்டு பகுதியில் வீழ்ந்த இளைஞனின் தலைக்கவசம் மற்றும் மேலாடை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் இளைஞனை காணவில்லை. பொலிஸார் அங்கிருக்கும் தடயப் பொருட்களை மட்டும் மீட்டெடுத்துள்ளனர்.

தற்போது குடியிருப்பு குளத்திற்கு அருகே பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.