தமிழகத்தின் கோயம்பேடு மார்க்கெட் பின்புறம் நெற்குன்றம் சாலையில் வசித்து வருபவர் ராஜ்குமார். புதுமுக நடிகரான இவர், அறுவடை நேரம் என்ற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வருகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி.
இவர்களது வீடு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான 700 சதுரஅடி நிலத்தில் கட்டப்பட்டு இருந்தது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடிகர் ராஜ்குமாருக்கு நோட்டீசு அனுப்பினர். வீட்டை இடித்து அகற்றுமாறு கூறி இருந்தனர். ஆனால் நடிகர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் மதியழகன் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு வந்தனர்.
அவர்கள் நடிகர் ராஜ்குமாரின் ஆக்கிரமிப்பு வீட்டை இடித்து அகற்றப் போவதாக தெரிவித்தனர். இதனால் நடிகருக்கும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வீட்டில் இருந்து மண்எண்ணை கேனுடன் ராஜ்குமாரின் மனைவி சாந்தகுமாரி வந்தார். திடீரென அவர் தன் மீது மண்எண்ணையை ஊற்றி வீட்டை இடித்தால் தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக கூச்சலிட்டார்.
பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் சாந்தகுமாரியை தடுத்து பாதுகாப்பாக அழைத்து சென்றனர். அதிகாரிகளின் நடவடிக்கையை அடுத்து ராஜ்குமாரின் உறவினர்கள் வீட்டில் இருந்த பொருட்களை டெம்போ வேனில் எடுத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து நடிகரின் வீட்டை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கினர். இச்சம்பவத்தினால் இன்று காலை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
நடிகர் ராஜ்குமார்– சாந்தகுமாரியை பொலிசார் மதுரவாயலில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
வீடு இடிக்கப்படுவதையொட்டி கோயம்பேடு பஸ்நிலைய இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொலிசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி மதியழகன் கூறும்போது, நெடுஞ்சாலை துறை இடத்தில் கட்டப்பட்டு இருந்த வீட்டை அகற்றுமாறு ராஜ்குமாருக்கு நோட்டீசு அனுப்பி இருந்தோம். ஆனால் அவர் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால் நாங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி உள்ளோம். இதேபோல் நெடுஞ்சாலை துறை இடத்தில் கட்டப்பட்டுள்ள இடத்தினை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.





