வவுனியாவில் குடித்துவிட்டு பொலிசாருக்கு பயந்து குளத்தில் வீழ்ந்த நபருக்கு நேர்ந்த கதி!!

630

வவுனியா போக்குவரத்துப் பொலிசார் குடித்துவிட்டு சென்றவர்களை விரட்டிச் சென்றபோது குளத்தில் வீழ்ந்த நபர் நேற்று (31.12.2018) காலை கரையொதுக்கி வீடு திரும்பிய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரத்தில் அமைந்துள்ள மதுபான நிலையில் நேற்று முன்தினம் (30.12.2018) இரவு 9.30மணியளவில் இருவர் மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிலில் பயணித்துள்ளனர்.

இவர்கள் மதுபோதையில் பயணிப்பதனை அவதானித்த போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர். எனினும், குறித்த இரு இருவரும் பொலிஸாரின் கட்டளையைத் தாண்டி முன்னோக்கி பயணித்ததன் காரணமாக அவர்களை பொலிஸார் துரத்திச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் குடியிருப்பு குளக்கட்டில் குறித்த இளைஞர்கள் பயணிக்கும்போது பொலிஸாரின் மோட்டார் சைக்கில் அவர்கள் மீது மோதி அவர்களுள் ஒருவர் குளத்திற்குள் வீழ்ந்துள்ளார்.

மற்றுமொருவர் குளக்கட்டின்மீது விழுந்த நிலையில் அவர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டு கைது செய்தனர்.

எனினும் குளத்திற்குள் வீழ்ந்த வரை மீட்கும் நடவடிக்கையில் இளைஞர்களும் பொதுமக்களும் சுமார் நான்கு மணித்தியாலத்திற்கு மேலாக ஈடுபட்டனர். ஆனாலும் இரவு நேரம் என்பதினால் அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

குளத்தில் வீழ்ந்த நபர் நேற்று காலை கரையொதுங்கி வீடு திரும்பிய சமயத்தில் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு குறித்த நபர்கள் இருவரையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று மாலை பொலிஸார் ஆஜர்படுத்தினார்கள்.

இதன் போது எதிர்வரும் 13ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குளத்தில் வீழ்ந்த நபர் குளத்தில் நீந்திச் செய்வதற்காகவே குளக்கரையில் தனது மேலாடையினை கழற்றிவிட்டு சென்று குளத்தின் மறுகரையில் இரவு முழுவதும் நின்றுள்ளதாக அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.