மரணமடைந்த உலகின் அவலட்சணமான நாய்!!

385

dogஅழகான பொருட்கள் தான் இனிமையான நினைவுகளில் நிற்கும் என்றில்லை. சில சமயங்களில் இதற்கு நேர் மாறாகவும் நடப்பதுண்டு.

இறைவன் படைப்பில் ஒவ்வொரு பொருளுக்குமே அதற்கென்று தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், உலகின் மோசமான அழகற்ற நாய் என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்ற அமெரிக்க நாயான எல்வுட் கடந்த வாரம் மரணமடைந்துள்ளது.

அமெரிக்காவே தேங்க்ஸ் கிவ்விங் டேயை விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்க எல்வுட்டின் மரணத்தால் அதன் இரசிகர்கள் மட்டும் சோகத்தில் மூழ்கிப் போயினர்.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி யைச் சேர்ந்த கரேன் குவிக்லிக்கு சொந்தமான நாய் எல்வுட். இந்த நாய், சைனீஸ் கிரெஸ்டட், சிகுவாகுவா ஆகிய நாய் இனங்களின் கலப்பினம்.

கடந்த 2007ம் ஆண்டு கலிபோர்னியாவில் நடைபெற்ற உலகின் மிகவும் அழகற்ற நாய் என்ற போட்டியில் பங்கேற்ற எல்வுட் மிக எளிதாக பட்டத்தைத் தட்டிச் சென்றது.

எப்போதும் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கும் எல்வுட், சற்று மூடிய கண்களுடனும், தலையில் விசித்திரமான வெள்ளை முடிக் கற்றைகளுடன் மிகவும் வித்தியாசமாக இருந்ததே அது பலரையும் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்தது.

பட்டத்தை வென்ற எல்வுட்டின் புகழ் அமெரிக்கா மட்டுமின்றி பிரேஸில், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் பரவத் தொடங்கியது. எல்வுட்டின் இரசிகர்கள் வட்டம் உலக அளவில் அதிகரித்தது.

இந்த உலகில் அழகற்றது என்று எதுவுமே இல்லை. ஒவ்வொரு உயிரினமும் அதற்குரிய இலட்சணங்களுடனும் தனித்தன்மையுடனும் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது என்ற கூற்றுக்கு உதாரணமாக திகழ்ந்த எல்வுட் எதிர்பாராத விதமாக கடந்த வாரம் தனது 8வது வயதில் மரணமடைந்தது.

தனது நாய் எல்வுட்டை மிகவும் நேசித்த அதன் உரிமையாளர் குவிக்லி, எவ்ரி ஒன் லவ்ஸ் எல்வுட் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

தனது செல்ல நாயான எல்வுட் குறித்து குவிக்லி நினைவு கூறியதாவது மிகவும் சிறிய நாயான எல்வுட் தான் வாழ்ந்த குறுகிய காலத்திலேயே பலரின் அபிமானத்தைப் பெற்றுள்ளது. எல்வுட்டை நேரில் பார்க்காதவர்கள் கூட அதன் மீது அன்பு செலுத்தியது நெகிழ்ச்சியாக உள்ளது.

கடந்த வாரம் வியாழக்கிழமை (நவம்பர் 28) தேங்ஸ் கிவ்விங் டே (அறுவடைத் திருநாள்) அன்று திடீரென நோய்வாய்ப்பட்டு எல்வுட் உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.