நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த திருடர்களை அலறி அடித்து ஓட வைத்த தமிழ்ப் பெண்!!

463

தமிழகத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டவர்களை அரிவாளுடன் விரட்டியடித்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஸ்ரீ வாரி கார்டன் பகுதியில் வசிப்பவர் ஸ்ரீனிவாச பிரபு. இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார், இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்த நிலையில், 31ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் இவர்கள் வீட்டில் திருடர்கள் புகுந்துள்ளனர்.

அப்போது ஸ்ரீனிவாச பிரபு வீட்டின் அருகில் வசிக்கும் மலர்விழி என்பவர், இரவில் நாய் சத்தம் போடுவதால் யானைகள் வந்திருக்குமோ என்ற பயத்தில் தனது வீட்டில் உள்ள சி.சி.டி.வி கேமராவைப் பார்த்துள்ளார்.

அப்போது அதில், ஸ்ரீனிவாச பிரபுவின் வீட்டினுள் ஒருவர் செல்வதைப் பார்த்த மலர்விழிக்கு சந்தேகம் வரவே, உடனடியாக கவிதாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அவர் நாங்கள் வீட்டில் இல்லையே என்று பதட்டமடைய மலர்விழி, அவரது கணவர் மற்றும் ஹரிஸ் என்பவரையும் அழைத்துக்கொண்டு கையில் அரிவாளுடன் ஸ்ரீனிவாச பிரபு வீட்டுக்குச் சென்றுள்ளார்.

வீட்டின் அருகே சென்றதும், திருடர்கள் உள்ளே இருப்பதை புரிந்து கொண்ட அவர்கள், திருடன் திருடன் என கூச்சலிட, உள்ளே இருந்த திருடர்கள் பதறியடித்து அங்கிருந்து காம்பவுண்ட் சுவர் எகிறி குதித்து தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

இவர்களும் அரிவாளுடன் துரத்த, மின்னல் வேகத்தில் திருடர்கள் தப்பிவிட்டனர். அதன் பின் இந்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார்

வீட்டில் சோதனை செய்தபோது, வீட்டின் பீரோவில் இருந்த செயின், மோதிரம், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகளை அவர்கள் திருடியிருப்பது தெரியவந்தது. அவை சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருடர்கள் நிறுத்தி வைத்திருந்த டூவிலரை சோதனை செய்தபோது டூவிலரில் ஒரு பையில் நகைகள் இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இதை போலீஸார் எடுத்துக்கொண்டு ஸ்ரீனிவாச பிரபு கொடுத்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடர்களைத் குடும்பத்துடன் தைரியமாக விரட்டிய மலர்விழிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.