மறைந்த நடிகை சவுந்தர்யா சொத்து விவகாரம் முடிவுக்கு வந்தது!!

773

Soundaryaநடிகர்கள் சிவாஜிகணேசன், ரஜினிகாந்த் நடித்து பெரும் வெற்றி பெற்ற படையப்பா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் நடிகை சவுந்தர்யா. தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கி புகழின் உச்சியில் இருந்தபோது சவுந்தர்யா பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

2004ம் ஆண்டு அந்த கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்றபோது அவர் ஹெலிகப்டர் விபத்தில் பலியானார். இதே விபத்தில் அவரது அண்ணன் அமர்நாத்தும் உயிரிழந்தார். நடிகை சவுந்தர்யாவுக்கும், அவரது அண்ணன் அமர்நாத்துக்கும் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சில சொத்துகள் உள்ளன.

அந்த சொத்துகளை பகிர்ந்து கொள்வது தொடர்பாக சவுந்தர்யாவின் தாயார் மஞ்சுளா, கணவர் ரகு, அண்ணி நிர்மலா, அண்ணன் மகன் சாத்வீக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சாத்வீக், நிர்மலா ஆகியோர் சார்பில் கடந்த 2009ம், ஆண்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இருவரும் தாக்கல் செய்த மனுவில், சொத்துகளில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு மஞ்சுளா, ரகு சார்பில் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் சவுந்தர்யாவும், அமர்நாத்தும் தங்கள் சொத்துகள் தொடர்பாக எந்த உயிலையும் எழுதி வைக்கவில்லை.

ஆனால் அதுபோன்ற போலி உயில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்று குற்றம் சாட்டி இருந்தனர். இப்போது இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அதன்படி வழக்கு தொடர்ந்த இரு தரப்பினரும் (மஞ்சுளா-ரகு, சாத்வீக்-நிர்மலா) தங்களுக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வந்திருப்பதாகவும், இந்த பிரச்சினையில் சமரசமாக செல்ல விரும்புவதாகவும் கூறி பெங்களூர் 4வது மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.

சொத்துகளை தங்களுக்குள் சுமூகமான முறையில் பிரித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்படி பெங்களூர் அனுமந்தநகரில் உள்ள 2 வீடுகள், 3 கடைகள் ஆகியவை சாத்வீக்குக்கு வெகுமதியாக கொடுக்கப்படுவதாகவும் அவர் பெயரில் வங்கியில் 25 லட்சத்தை நிரந்தர வைப்பு தொகையாக டெபாசிட் செய்வதாகவும் அவரது தாயார் நிர்மலாவுக்கு 1.25 கோடியை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல அமர்நாத்துக்கு சொந்தமான விவசாய நிலங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை மஞ்சுளா, நிர்மலா, சாத்வீக் ஆகியோருக்கு சரிசமமாக பிரித்து கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இது தவிர நிர்மலாவை இணை உரிமையாளராக கொண்ட இதர சொத்துகள் மஞ்சுளாவுக்கு வழங்கப்படும்.

இதேபோல நிர்மலாவும், சாத்வீக்கும் தாங்கள் கோர்ட்டில் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றுக்கொள்வதாகவும், மேற்கொண்டு உயில் தொடர்பாக எந்த உரிமையும் கொண்டாட மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

அதன்படி கடந்த வாரம் நிர்மலாவும், சாத்வீக்கும் தாங்கள் ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் முறைப்படி வாபஸ் பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.