அண்மையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கள் வவுனியா வடக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ஏனைய மாவட்டங்களிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வவுனியா வடக்கிற்கு வழங்கபடவில்லையென நேற்று வவுனியா வடக்கு பிரதேச சபை அலுவலகத்தில் பிரதேசசபையின் தவிசாளர் ச.தணிகாசலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளமானது எமது பிரதேசத்தை மிகுந்த பாதிப்பிற்குள்ளும், இடர்பாடுகளிற்குள்ளும் தள்ளியுள்ளது. கடந்த காலத்தில் எம்மால் முடிவுறுத்தபடும் நிலையில் இருந்த சில அபிவிருத்திப் பணிகள் நிறைவுபெறும் நேரத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டமையால் பாரிய பின்னடைவுக்களுக்குள்ளாகியுள்து.
இதனால் பல இலட்சம் ரூபா நிதி வீணாகிபோயுள்ளது, வெள்ளபாதிப்புகளால், விவசாயகாணிகள் பல அழிவடைந்துள்ளதுடன், தொடர்மழை காரணமாக கால்நடைகளான மாடுகள், ஆடுகள் போன்றனவும் அதிகளவில் இறந்திருக்கின்றது. யானைகளின் தொல்லைகளும் அதிகரித்த நிலையில் உள்ளது.
குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கபட்ட மாறாயிலுப்பை, கந்தரோடை, காஞ்சிராமோட்டை, ஊஞ்சல்கட்டி மக்களுக்கான உதவிகள் மேலும் தேவைப்படுகின்றன.
மக்கள் தமது வீடுகளில் குடியேறுவதில் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது வீடுகள் வசிப்பதற்கு ஏற்றவையானவையாக இல்லை. பாதிக்கபட்ட வீதிகள் என்ற வகையில் 37 வீதிகள் காணப்படுகின்றது. அது தொடர்பான தகவல்களை நாம் அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம்.
தற்போது அவசர நிதியாக 20 மில்லியன் ரூபா எமக்கு தேவைபடுகின்றது. இது தொடர்பாக அரசிற்கு அழுத்தங்களை வழங்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியபடுத்தியுள்ளோம்.
அரச நிர்வாகமோ, அமைச்சரைவையோ, உயர்மட்ட தலைவர்களோ எமது பிரதேசம் தொடர்பாக கவனம் செலுத்தவில்லை என்பது மிகவும் மனவருத்ததிற்குரியது. போர் பாதிப்புகள் உட்பட பல விதமான பாதிப்புகளை சந்தித்துள்ள வவுனியா வடக்கை புறந்தள்ளபடுவதையிட்டு நாம் விசனம் அடைகின்றோம்.
போரிற்கு பின்னர் மீள்குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்ட நிலையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் மாவட்டங்களிற்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் வவுனியா வடக்கிற்கு வழங்கபடவில்லை.
அத்துடன் எமது பிரதேசத்தில் உள்ள சில வட்டாரங்களினால் பூதாகாரமான பிரச்சனைகள் உருவாகி வருகின்றது. அதாவது 14 வட்டாரங்களை கொண்ட எமது பிரதேச சபையிலே நான்கு வட்டாரங்களான கல்யாணபுர, தெவிட்டநுவர, போகஸ்வெவ , சம்பத்நுவர போன்ற பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டதின் நிர்வாக பிரிவில் உள்ளீர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் உள்ளுராட்சி சபை எல்லையாக வவுனியா வடக்கு நிர்ணயிக்கபட்டிருக்கிறது. இதனால் அபிவிருத்தி திட்டங்களிற்கான நிதி பகிர்வு, உட்கட்டுமானம், அபிவிருத்தி போன்ற விடயங்களில் பல்வேறு சிக்கல் நிலைமைகளை சந்தித்து வருகின்றோம். அதற்கான விசேட நிதிகள் எவையும் எமக்கு எந்த வழியிலும் கிடைப்பதில்லை.
இதனை எப்படி தீர்ப்பது என்பது எமக்கு தெரியவில்லை. இது அரசியல் காரணங்களா அல்லது வேறு உள்நோக்கங்களா என்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களால் ஒதுக்கப்படும் நிதிகளை வைத்துக்கொண்டே ஒட்டுமொத்த பிரதேசத்தின் அபிவிருத்தியையும் செய்யவேண்டியுள்ளது.
இவ்வட்டாரங்களில் பெரும்பாண்மையின மக்களே வாழ்கின்றனர். மகாவலி அதிகாரசபை என்ற நிர்வாக அலகு அங்கு இருக்கிறது. அப்பகுதியில் எந்த அபிவிருத்தியை மேற்கொள்வதாக இருந்தாலும் மகாவலி அதிகாரசபையிடம் அனுமதி பெறவேண்டிய நிலை இருக்கிறது.
அப்பகுதியில் இருந்து பிரதேச சபைக்கான வரிப்பணம் கிடைப்பது மிகவும் குறைவு. ஒரு சில கடைகளில் இருந்து மாத்திரமே வரி அறவிட்டு வருகின்றோம். உதாரணமாக காணி முத்திரை தீர்வைவரி, போக்குவரத்து தண்டபணம் போன்றவை அனுராதபுரம், திருகோணமலை, முல்லைதீவு போன்ற பகுதிகளிற்கே செல்கின்றது. அது நியாயமானது அல்ல சட்டரீதியற்றது.
பல்வேறு தரப்புகளிற்கு இவ்விடயம் தொடர்பாக தெரியபடுத்தியுள்ளோம். அமைச்சு மட்டதிலும் இது தொடர்பான சந்திப்புகளை மேற்கொண்டுள்ளோம். அமைச்சினுடைய சட்டவல்லுனர் ஒருவர் சொல்கிறார் இப்படி ஒரு நிர்வாக அலகு இருப்பதாக தங்களிற்கே தெரியாது என்று. நாம் நியாயமான விடயங்களை கூறவிளையும் போது அது வேறுவிதமாக அர்த்தம் கொள்ளபடுகின்றது. தட்டிக்கழிக்கபடுகின்றது.
எனவே நகர் பகுதிகள் போல எங்களிற்கான நிதி உதவிகள் அதிகரிக்கபடவேண்டும் என்பதே எமது வேண்டுகோள் என்று மேலும் தெரிவித்தார்.





