வவுனியாவில் பூர்வீக நிலங்களிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு கோரி ஆர்ப்பாட்டம்!!

408

வவுனியா ஆண்டியாபுளியங்குளம் இராமியன்குளம் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் தமது பூர்வீக விவசாய நிலங்களை விடுவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (04.01) மதியம் 1.30 மணிக்கு நடைபெற்றது.

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலப்பிரிவுக்குட்பட்ட ஆண்டியா புளியங்குளம் கிராம சேவகர்பிரிவிற்குட்பட்ட இராமியன்குளம் பகுதியில் உள்ள காணிகள் கடந்த 1965ஆம் ஆண்டு தொடக்கம் அக்கிராம மக்களால் விவசாயம் மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

போர் சூழலால் வெளியேற்றப்பட்ட அப்பகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த நிலங்களில் குடியேறியிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்காக இடைத்தங்கல் முகாம்கள் அமைக்க அதிகளவிலான நிலங்கள் தேவைப்பட்டதையடுத்து அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் இராமியன்குளம் பகுதி நிலத்தை விட்டுத்தருமாறும் இந்த மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டதும் அவர்களது நிலம் மீண்டும் கையகப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் கடந்த 2013ம் ஆண்டளவில் அகதிகளாக்கப்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தபட்டபோதும் இராணுவத்தினர் குறித்த நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டதுடன் இதுவரை குறித்த நிலங்கள் விடுவிக்கப்டவில்லை.

இதனை கண்டித்தும் தமது நிலங்களை இராணுவத்தினர் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக விடுவிக்குமாறு தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இராமியன்குளம் மக்கள் செட்டிக்குளம் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன் இராணுவம் தமது காணிகளிலிருந்து ஏன் வெளியேற்றப்படவில்லை என கேள்வி எழுப்பியிருந்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிராம மக்கள் தங்களின் விளைநிலங்களில் பயிர் செய்யும் இராணுவம் அம் மரக்கறிகளை தங்களுக்கே விற்று பணம் சம்பாதிப்பதாகவும் மக்கள் வேலையின்றி கூலிவேலை தேடி அலைவதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள் இராணுவ முகாம்களை அண்டிய பிரதேசங்களில் மேய்ச்சலுக்கு செல்லும் தங்கள் கால்நடைகளை இராணுவத்தினர் சுட்டு கொல்வதாகவும் குற்றஞ்சாட்டினர்.