வவுனியாவில் ஆடை விற்பனை நிலையமாக மாறிய கிராம சேவையாளர் அலுவலகம்!!

761

வவுனியா வடக்கு நெடுங்கேனி ஒலுமடு கிராமசேவையாளர் அலுவலகம் நேற்றையதினம் (03.01.2019) ஆடை விற்பனை நிலையமாக மாறியமை பொதுமக்கள் இடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

நெடுங்கேனி ஒலுமடு மகாவித்தியாலத்தில் நேற்றையதினம் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்பட்டன.
இதனை கேள்வியுற்று வவுனியாவில் இயங்கிவரும் குறித்த ஓர் வர்த்தக நிலையத்தின் ஊரிமையாளர் வவுனியாவிலிருந்து பாடசாலை சீருடை துணி மற்றும் பாதணிகளை வாகனமொன்றில் ஏற்றிச்சென்று ஒலுமடு கிராம சேவையாளர் அலுவலகத்தினுள் (அனுமதியின்றி) வைத்து மாணவர்களுக்கு விநியோகம் செய்துள்ளார்.

இதன் பின்னர் ஒலுமடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குறித்த கிராம சேவையாளர் அலுவலகத்தினை முற்றுகையிட்டதினையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக ஒலுமடு கிராமசேவையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது,

இச் சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் நான் சேனைப்புலவு கிராமத்தில் பதில் கடமையில் இருந்தேன். எனது அனுமதியின்றியே குறித்த விற்பனை நிலைய ஊழியர்கள் எனது அலுவலகத்தினை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளகோரி இன்றையதினம் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இச் சம்பவம் தொடர்பாக கேட்டபோது, வவுனியா வடக்கு நெடுங்கேணி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது தான் மீண்டேழுந்து வந்து கொண்டிருக்கின்றோம். நெடுங்கேணியில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிகள் விற்பனை செய்யும் ஐந்து வர்த்தக நிலையமும் பாதணிகளை விற்பனை செய்வதற்கு ஆறு வர்த்தக நிலையங்களும் உள்ளன.

இப்படியான மோசமான செயலை வவுனியா பெரிய வர்த்தகர்கள் செய்வது கவலையளிக்கின்றது. அன்றாடம் நாங்கள் சிறு லாபத்திற்காக வர்த்தக நிலையத்தினை நடாத்தி வருகின்றோம். எமது வயிற்றில் அடிப்பது போல் அமைந்துள்ளது.

எனிவரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறாது இருப்பதுக்கு உரிய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.