இரண்டாவது மாடியிலிருந்து வீசியெறியப்பட்ட இளம்பெண் : அவர் மீதே குற்றம் சாட்டிய நீதிமன்றம்!!

341

 

இளம்பெண்

பிரான்சில் தனது கணவரால் இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக வீசியெறியப்பட்டதால் கழுத்துக்குக் கீழ் செயல்படாமல் போன ஒரு பெண் இழப்பீடு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அவர்மீதும் தவறு இருப்பதாகக் கூறி அவருக்கு வழங்கப்பட இருந்த இழப்பீட்டை பாதியாக குறைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் அந்தப் பெண்ணை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Aida (31) என்று அழைக்கப்படும் அந்தப் பெண்ணை அவளது கணவர் தாக்குவது வழக்கம். ஒரு நாள் அவளது கணவர் Aidaவின் முன்னிலைமையிலேயே அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவரை தாக்க, அங்கு வந்த பொலிசார், Aida இனி அந்த வீட்டில் தங்குவது பாதுகாப்பு இல்லை என்று கூறி அவரை அங்கிருந்து போகச் சொல்லியுள்ளனர். ஆனால் Aida அங்கிருந்து செல்லவில்லை.

பின்னர் Aidaவுக்கும் அவரது கணவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் அவரது கணவர் Aidaவை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். இரண்டாவது மாடியிலிருந்து விழுந்த Aida சுயநினைவின்றிக் கிடப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் பொலிசாரை அழைக்க, பொலிசார் அவரது கணவரைக் கைது செய்ததோடு Aidaவை மருத்துவமனையில் சேர்த்தனர்.

கீழே வீசியெறியப்பட்டதில் Aidaவுக்கு கழுத்துக்கு கீழே செயல்படாமல் போய்விட்டது. அவரது கணவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதோடு, Aida சார்பில் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டது.

அவருக்கு 90000 யூரோக்கள் இழப்பீடு வழங்குவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில் Aidaவின் வழக்கறிஞர்கள் அந்த தொகையை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிமன்றத்தைக் கோரினர்.

அந்த நேரத்தில் மற்றொரு நீதிபதி குறுக்கிட்டு Aidaவுக்கு வழங்குவதாக முடிவு செய்யப்பட்ட தொகையில் பாதி தொகையைதான் வழங்க முடியும் என்று கூறிவிட்டார்.

கணவனின் மூர்க்க குணம் தெரிந்து பொலிசார் Aidaவை வீட்டை விட்டு செல்லுமாறு கோரியும் அவர் செல்லாமலிருந்தது அவரது குற்றம் என்று கூறியுள்ள நீதிபதி, அதனால் அவருக்கு பாதி தொகைதான் இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறிவிட்டார்.

அந்த இரவு நேரத்தில் ரயிலைப் பிடிக்கவோ, தனது நண்பர்கள் வீட்டுக்கோ அல்லது அரசு காப்பகங்களுக்கோ செல்ல முடியாத சூழல் இருந்ததாலேயே தங்கள் கட்சிக்காரர் அவரது கணவர் வீட்டில் தங்கியதாக கூறி மேல் முறையீடு செய்துள்ளனர் Aidaவின்வழக்கறிஞர்கள்.