எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளைஞன் மர்ம மரணம்!!

778

 

இளைஞன் மர்ம மரணம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த இளைஞர் திடீரென மர்மமான முறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவக்கொலை எனக்கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம், இறையூர் கிராமத்தை சார்ந்த சபாபதி அவர்களின் மகன் பரந்தாமன்(25). இவர் கேரளாவில் உள்ள தனியார் சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்து வருகிறார். பரந்தாமன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், முத்தையன்பட்டி கிராமத்தை சார்ந்த 18 வயதான ராமுவின் மகள் சிவானி என்பவரை காதல் திருமனம் செய்து கொண்டு தலைமறைவானார்.

இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இதற்கு இளம்பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மதுரை சிந்துப்பட்டி பொலிஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் 18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்ததாக கூறி, போக்ஸோ சட்டத்தின் கீழ் பரந்தாமனை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, 3ம் தேதி வரை மதுரையில் தங்கி சிந்துபட்டி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என கடந்த 25ம் தேதி நீதிமன்றம் அவரை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் விடுவித்தது.

அதேபோல மதுரையில் தங்கி பரந்தாமன் தினம்தோறும் கையெழுத்து போட்டு வந்தார். இந்த நிலையில் கடைசி நாளான 3-ம் தேதியன்று பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பரந்தாமன் வீடு திரும்பவில்லை. மாறாக புனேவில் உள்ள அறையில் பரந்தாமன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பரந்தாமன் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பேசிய அவருடைய தாய், கடைசி நாளில் கையெழுத்து போட்டபின் வீடு திரும்பி விடுவேன் என என்னுடைய மகன் போன் செய்து பேசினான். அப்படி இருக்கையில் மதுரையில் இருந்து ஒருநாளில் எப்படி புனே சென்றிருப்பான் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற திட்டக்குடி தாசில்தார் கண்ணன், மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  மேலும், புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர். இதனை ஏற்று தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.