நண்பனின் பிறந்தநாளுக்கு சென்ற இளைஞன் கழுத்தறுபட்டு சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்!!

392

 

இளைஞன் படுகொலை

தமிழகத்தின் கும்பகோணம் அருகே மர்ம கும்பலால் கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீது என்பவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் வசித்து வந்த இவரது மகன் மும்தசர் மயிலாடுதுறை பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் மும்தசர் நேற்று மாலை சுமார் 6.30 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தமது அக்கா வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து தமது நண்பர் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாகப் போன் மூலம் தனது தாயாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசரை கடத்தியுள்ளதாகவும் ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த மும்தாஜ் பேகம் மற்றும் அவரின் உறவினர்கள் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருப்புவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர். தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் மேலும் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருப்புவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் மும்தசர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார் மாணவர் மும்தசர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவர் மும்தசர் சென்ற ஸ்கூட்டர் எங்கு உள்ளது என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்டது உண்மையா, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார், அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.