கடலில் 100 அடி ஆழத்தில் சிக்கிய நைஜீரிய பிரஜை 3 நாட்களுக்கு பின் மீட்பு!!

310

nigஅட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த மே மாதம் வீசிய பலத்த காற்றினால் நைஜீரியா அருகே சென்ற விசைப்படகு ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கடலுக்கு அடியில் சென்றுவிட்டது.

இதில் இருந்த 12 பேரும் அப்போது தண்ணீருக்குள் மூழ்கினர். இதையடுத்து நீர்மூழ்கி மீட்புக் குழுவினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்துபோன 4 பேரின் உடல்களை மீட்டனர். மற்றவர்கள் அனைவரும் இறந்து இருக்க கூடும் என்ற நம்பிய நிலையில் மூன்றாவது நாளும் நீர்மூழ்கி வீரர்கள் கடலுக்குள் தேடினர். அப்போது கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்திற்குள் கிடந்த படகில் ஒரு கை மட்டும் தெரிவதை நீர் மூழ்கி வீரர் ஒருவர் கண்டார்.

உடனே அந்த கையை அந்த வீரர் பிடித்து இருக்கிறார். அப்போது அந்த கையானது வீரரின் கையை இறுக பற்றிக்கொண்டது. இதனால் அந்த வீரர் பயமும் அதிர்ச்சியும் அடைந்தார்.

இருப்பினும் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அவர் தனது பணியை தொடர்ந்தார். அப்போது தனது கையை பிடித்தது உயிர் பிழைத்த நைஜீரிய சமையல் கலைஞர் ஹாரிசன் ஓட்ஜெக்பா ஓக்னெ என்பது தெரியவந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த அவர் பத்திரமாக மீட்கப்பட்டு வெதுவெதுப்பான நீரில் வைக்கப்பட்டும் போதுமான ஒக்ஸிஜன் கொடுக்கப்பட்டும் காப்பாற்றப்பட்டார். இதுகுறித்து ஓக்னே கூறியதாவது..

விபத்து நடந்த போது கழிவறையில் இருந்த நான் அருகிலிருந்த 4 அடி நீளமுள்ள காற்றடைத்த பைக்குள் புகுந்துகொண்டேன். மூன்று நாட்களாக தண்ணீருக்கு அடியில் மை இருட்டில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தேன்.

அதிலிருந்த கொஞ்ச காற்றையும் கிடைத்த ஒரு பாட்டில் கோக்கையும் குடித்து சாகப்போகிறோம் என்று எண்ணி பைபிள் வாசகங்களை கூறிக்கொண்டு இருந்தேன். உறையும் குளிரில் கால் சட்டையுடன் மரண பீதியில் இருந்த நான் இறைவா என்னை காப்பாற்று என்று கூறிக்கொண்டே இருந்தேன்.

அப்போது ஒரு கை என்னை பிடிப்பதை உணர்ந்தேன். பிறகு அது நீச்சல் வீரரின் கை என்பதை கண்டு மிகுந்த சந்தோஷமடைந்தேன். பிறகு அவர்கள் என்னை அங்கிருந்து காப்பாற்றினர்கள். அவர்களுக்காக எனது வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவேன். இவ்வாறு ஓக்னே கூறினார்.

இச்சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் இந்த தகவலும் இதுகுறித்த வீடியோ காட்சிகளும் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.