அசாத்திய திறமை
சிற்பமென்பது ஒரு முப்பரிமாணக் கலை. தேவையற்றவற்றை நீக்கி உள்ளே மறைந்திருக்கும் வடிவத்தை வெளிக்கொணர்வது. சாதாரணமாக நாம் பார்க்கின்ற கற்பாறையையோ அல்லது மரத்துண்டையோ ஒரு சிற்பக்கலைஞன் கலைக் கண்களோடு நோக்குகிறான்.
அதற்குள் மறைந்திருக்கும் கலைப்பொருள் அவன் கண்களுக்கு மட்டுமே தட்டுப்படுகின்றது.அதை வெளிக்கொண்டு வருவதற்காக மிகுந்த பொறுமை நிதானம் போன்ற பண்புகளை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறான்.
அண்மைக்காலமாக மிகவும் பிரபலமடைந்துவரும் Miniature என்று அழைக்கப்படும் சிற்றுரு செதுக்கல் அல்லது நுண் செதுக்கல் கலையில் ஒரு சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இக்கலையில் கைதேர்ந்த கலைஞர்கள் பலர் மேற்குலக நாடுகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.பென்சில் கூர் மற்றும் வெண்கட்டி போன்றவற்றில் கண்களை கொள்ளைகொள்ளும் கலைப்பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.
நம்நாட்டிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில கலைஞர்கள் இனங்காணப்படுகின்றனர். இவ்வரிசையில் வவுனியா பூந்தோட்டத்தை சேர்ந்த அன்ரனி குரூஸ் விபுலன் (வயது 20) எனும் மாணவன் ஒருவனும் வெண்கட்டி மற்றும் பென்சில் கூரில் நுண் சிற்பங்களை செதுக்கி சாதனை படைக்கத் தொடங்கியுள்ளார்.
அண்மையில் அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற கைப்பணித்துறை போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
செதுக்குவதற்கு நவீன கருவிகளோ,வசதிகளோ அற்ற நிலையில் சாதாரண ஊசி மற்றும் சிறிய கத்தியைப் பயன்படுத்தி கலை வடிக்கும் இம் மாணவனின் முயற்சி பாராட்டுதற்குரியது.
தனக்குள் இருக்கும் கலையை தானாகவே இனங்கண்டு யாருடைய தூண்டுதலுமின்றி சுயமாக இயங்கி இன்னும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஊக்கமும் கொண்டிருக்கும் மாணவனை நாமும் வாழ்த்தி ஊக்குவிப்போம்.