பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியாவில் கடனட்டை மோசடியில் ஈடுபட்ட திருடனை அடையாளம் காண்பதற்காக ‘பூட்சிற்றி’ மற்றும் ‘சதொச’ விற்பனை நிலையங்களிலுள்ள கண்காணிப்பு கமராக்களை ஆய்வு செய்த பொலிசார் பல மாதங்களாக குறித்த நிலையங்களில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காத நிலையில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரின் கடனட்டை திருடப்பட்ட நிலையில் தனது கடனட்டை காணாமல் போனதை அறிந்தவுடன் வங்கிக்கு அறிவித்தல் வழங்கி கடனட்டையின் பணப்பரிமாற்றத்தை நிறுத்தியதுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார்.
திருட்டுப் போன கடனட்டையை பயன்படுத்தி வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள ‘பூட்சிற்றி’ மற்றும் நெளுக்குளம் சந்தியில் அமைந்துள்ள ‘சதொச’ விற்பனை நிலையங்களில் சுமார் எட்டாயிரம் ரூபாவிற்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது என வங்கியினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த விற்பனை நிலையங்களில் கண்காணிப்பு கமராக்களை பொலிசார் ஆய்வு செய்த போது வவுனியா ‘பூட்சிற்றியில்’ கமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் அவை இயங்கவில்லை என்றும்,
நெளுக்குளம் ‘சதொச’ விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவே இல்லை என தெரிவித்த பொலிசார் இவ் விற்பனை நிலையங்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக கடனட்டை திருடனை பிடிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட இளைஞர் மிகவும் சிரமத்தின் மத்தியில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், ஒரு நாளைக்கு பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் விற்பனை நிலையத்தில் கண்காணிப்பு கமராக்கள் இயங்காமல் இருப்பதும்,
கமராக்கள் பொருத்தப்படமால் இருப்பதும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு குறித்து குறித்த நிறுவனங்கள் அசமந்தமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
அத்துடன் குறித்த திருடன் இங்கு கமராக்கள் இயங்காமல் இருப்பதை அறிந்தே எனது கடனட்டையை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்துள்ளான்.
இவ்வாறான நிலைமை எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது எனின் குறித்த விற்பனை நிலையங்கள் கண்காணிப்பு கமராக்களை சீராக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.








