வவுனியா மதுபானசாலை விவகாரம் : பொது அமைப்புகள் அரச அதிபருடன் சந்திப்பு!!

320

வவுனியா பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், மக்கள் குடிமனைக்கு முன்பாகவும் அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி பொது அமைப்பக்கள் நேற்று அரசாங்க அதிபரை சந்தித்திருந்தனர்.

மக்கள் குடியிருப்பு மற்றும் அரசின் கருத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய உணவகம் அமைந்துள்ள பகுதிக்கு முன்பாக குறித்த மதுபானசாலை அமைந்துள்ளமை தொடர்பாகவும் அதனை அகற்றக்கோரி குடியிருப்பு கிராம அபிவிருத்தி சங்கம் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனருக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் வவுனியாவில் நேற்று முன்தினம் ஒன்று கூடிய பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றக்கோரி வெகுஜனப் போராட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.

இந் நிலையில் நேற்று வவுனியா அரசாங்க அதிபரை சந்தித்த பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறித்த மதுபானசாலையை அகற்றுமாறு கோரி எழுத்து மூலமான கோரிக்கையை வழங்கியிருந்ததுடன் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஏதுவான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசாங்க அதிபர் ஏதுவான நடவடிக்கைகளை எடுப்பதாக பொது அமைப்புக்களிடம் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் வவுனியா நகரசபை தலைவரிடமும் இது தொடர்பாக முறையிடப்பட்ட போது சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முயற்சியை எடுப்பதாகவும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் நகரசபை தலைவர் தெரிவித்திருந்தார்.