தமிழர்களை அச்சுறுத்தி கப்பம் பெற்ற இரு பெண்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

690

Jail-1விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கியமை தொடர்பான தகவல்கள் தம்வசம் இருப்பதாக அச்சுறுத்தி தமிழ் நபர்களிடம் கப்பம் பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களும் கடுவலை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏ.ஏ. திலினி சமன்மலி மற்றும் சுனேத்ரா பிரபானி ஜயதிலக்க ஆகிய இரண்டு பெண்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் வசந்த ஜினதாச உத்தரவிட்டார்.

சந்தேக நபர்களான இந்த பெண்களுக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றத்திலும் வழக்கொன்று நடைபெற்று வருவது நேற்று நீதிமன்றத்தில் தெரியவந்தது.

தொலைபேசி எண்கள் அடங்கிய விபரக்கொத்தில் உள்ள தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு தமிழர்களை அச்சுறுத்தி இந்த பெண்கள் பல காலமாக கப்பம் பெற்று வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மிரிஹான பொலிஸ் நிலையத்தின் விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் இந்த பெண்கள் கடந்த மாதம் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.