வரலாற்று நாயகன் நெல்சன் மன்டேலாவின் உடல் 15ம் திகதி நல்லடக்கம்!!

378

Nelson Mandelaதென்னாபிரிக்க மக்களை மாத்திரமன்றி உலகெங்கும் உள்ள பல கோடிக்கணக்கானோரை சோகத்தில் ஆழ்த்தியபடி வரலாற்று நாயகன் நெல்சன் மண்டேலா தனது 95வது வயதில் இயற்கை எய்தினார்.

எதிர்வரும் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரச மரியாதையுடன் மண்டேலாவின் இறுதிச் சடங்கு நடத்தப்படவுள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸூமா அறிவித்துள்ளார்.
அவரது மறைவை முன்னிட்டு தென்னாபிரிக்காவில் எல்லாக் கொடிகளும் 10 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

துக்க அனுஷ்டிப்புக் காலம் தென்னாபிரிக்காவில் தொடங்கிய நிலையில் அந்நாட்டின் அனைத்துப் பொது, அரசு கட்டிடங்கள் மற்றும் உலகெங்கும் உள்ள தென்னாபிரிக்கத் தூதரகங்கள் அனைத்திலும் அஞ்சலிக் குறிப்புகளை மக்களும் பிரமுகர்களும் எழுத உதவும் வகையில் அஞ்சலிப் புத்தகங்கள் வைக்கப்படுகின்றன.

ஜோஹனஸ்பர்கின் புறநகர்ப்பகுதியில் உள்ள எப்.என்.பி அரங்கத்தில் தேசிய துக்கப் பிரார்த்தனை நிகழ்வு ஒன்று நடத்தப்படவிருக்கிறது. அதன் பின்னர், பிரிட்டோரியாவில் மூன்று நாட்கள் நெல்சன் மண்டேலாவின் உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி நெல்சன் மண்டேலாவின் உடல் கிழக்கு கேப் பகுதியில் அவர் வளர்ந்த குனு கிராமத்தில் அரச மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்படும்.