கர்பிணிப் பெண்
யாழ்ப்பாணத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணொருவரின் வயிற்றில் மண்வெட்டிப் பிடியினால் தாக்கிய கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபரான காதலன் தப்பியோடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். சாவகச்சேரி, கெற்போலி பகுதியில் நேற்று மாலை தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் காணப்பட்ட காதல் உறவே இதற்கு காரணம் எனத் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை குறித்த பெண் வீதியால் சென்று கொண்டிருந்த போது , வீதியில் வழிமறித்த காதலன் மண்வெட்டி பிடியினால் அவரது வயிற்றில் பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கான பெண் வீதியில் சுருண்டு விழுந்து கதறியதை அடுத்து வீதியால் சென்றவர்கள் குறித்த பெண்ணை மீட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கான பெண் முறைப்பாடு செய்துள்ளார். சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.







