விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்த இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

977

விளக்கமறியலில்..

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலை படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒளிப்பதிவு செய்த மற்றும் பாடலை ஒலிக்க விட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இரண்டு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த இரண்டு பேரையும் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மீளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.