யாழ். கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவரை விசாரணைகள் நிறைவடைவதற்குள் பிணையில் விடுவிப்பது ஏற்புடையது அல்ல எனவும் நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். கொக்குவில் பகுதியில் குடும்ப பெண் ஒருவருடன் முறையற்ற உறவை வைத்திருந்த வான் சாரதி ஒருவர், அந்தப் பெண்ணின் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டையடுத்து, தாயாரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியை மீட்ட பொலிஸார், அவரை சட்ட மருத்துவரின் பரிசோதனைக்குட்படுத்தினர்.
அத்துடன் சந்தேகநபரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவையும் பொலிஸார் இந்த மாத முற்பகுதியில் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.
எனினும் சந்தேகநபர் இந்தியாவுக்குச் சென்றிருந்ததால் அவரைக் கைது செய்ய முடியவில்லை.
இந்நிலையில் சந்தேகநபர் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரது உறவினர் ஒருவரின் இறுதி சடங்குக்கு வந்துள்ளமையை பொலிஸார் அறிந்து கொண்டனர்.
அதனையடுத்து சந்தேகநபர் நேற்றுத் திங்கட்கிழமை வேன் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வேனையும் கைப்பற்றினர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.
“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார்.
அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.
சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ். நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம்.
அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம். அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை.
அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.





