ஆர்ப்பாட்டப் பேரணி
வடக்கு கிழக்கில், எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை இன்று (30.01) முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது வவுனியா பழைய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி வவுனியா பசார் வீதி வழியாக வவுனியா பொது வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் போராட்டம் ஆரம்பித்த பழைய பேரூந்து நிலையத்தை சென்றடைந்திருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் எதிர்வரும் 25 ஆம் திகதி ஐநாவில் ஆரம்பிக்க இருக்கும் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்காமல் எமது பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத்தை சேர்ந்த உறுப்பினர்கள், மத போதகர்கள் உட்பட பெருமளவானோர் இப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

















































