4 மாநிலங்களிலும் காங்கிரஸூக்கு படுதோல்வி!!

514

congஇந்திய சட்டப்பேரவை தேர்தல் நடந்த 4 மாநிலங்களில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, சட்டீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜ. ஆட்சியை கைப்பற்றுகிறது.

டெல்லியில் 3 முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் இம்முறை 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது.

மிசோரமை தவிர மற்ற 4 மாநிலங்களில் நேற்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

ஆரம்பத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. டெல்லியில் முதலில் வெளியான முன்னணி நிலவரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்தது. இதனால் டெல்லியில் அக்கட்சியின் அலுவலகத்தில் பட்டாசுகளை வெடித்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தை தொடங்கினர்.

ஆனால் நேரம் செல்ல செல்ல நிலைமை மாற ஆரம்பித்தது. டெல்லியில் அதுவரையில் பா.ஜ.வுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே சரிசமமான நிலை இருந்த நிலை மாறி பா.ஜ. குறிப்பிடத்தக்க அளவில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 2ம் இடத்துக்கும், காங்கிரஸ் 3ம் இடத்துக்கும் தள்ளப்பட்டது.

டெல்லியில் 3 முறை முதல்வர் பதவி வகித்த ஷீலா தீட்சித் புதுடெல்லி தொகுதியில் தோல்வியுற்றார். புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இத்தொகுதியில் வெற்றி பெற்றார். சத்தீஸ்கரில் பாஜக 48 தொகுதியிலும், காங்கிரஸ் 40 தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. அம்மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் சிவராஜ் சிங் சவுகான் வெற்றி பெற்றார். ராஜஸ்தானில் பாஜக முதல்வர் வேட்பாளர் வசுந்தரா வெற்றி பெற்றார். மேலும் அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.