இலங்கை வரலாற்றில் தமிழ் மாணவனின் சாதனை!!

339

தமிழ் மாணவனின் சாதனை

தாய்லாந்தில் நாளை முதல் நடைபெறவிருக்கும் சர்வதேச அறிவியல் புலமை கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிநுட்ப கண்காட்சியில் பங்கேற்க இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் இன்று பயணமாகின்றார்.

இலங்கை வரலாற்றில் தனியொருவரின் 3 கண்டுபிடிப்புகள் சர்வதேச கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும். இலங்கையின் இளம் தமிழ் விஞ்ஞானி சோமசுந்தரம் வினோஜ்குமார் அம்பாறை – சம்மாந்துறை, கோரக்கர் கிராமத்தை சேர்ந்தவராவார்.

வரலாற்றில் முதல் தடவையாக தனி ஒருவரின் மூன்று கண்டுபிடிப்புக்கள் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்ப கண்காட்சிப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளது.இது இவரது இரண்டாவது பயணமாகும். கடந்த வருடமும் வினோஜ்குமார் தாய்லாந்து சென்று பதக்கம் வென்று வந்திருந்தார்.

நாளைய தினம் தொடக்கம் பெப்ரவரி ஆறாம் திகதி வரை தாய்லாந்தில் உள்ள பேங்கொக் சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மாநாட்டு மண்டபத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொள்ளும் சர்வதேச அறிவியல் புலமை, கண்டுபிடிப்பு மற்றும் தொழிநுட்ப கண்காட்சிப் போட்டி இடம்பெறவுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தை பயின்று வரும் சோமசுந்தரம் வினோஜ்குமார் சென்ற வருடம் விஞ்ஞான, ஆராய்ச்சி மற்றும் தொழிநுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு நடத்திய தேசியமட்ட புத்தாக்கப் போட்டியில் ஏழு தேசிய பதக்கங்களைப் பெற்றிருந்தார்.

இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலவசமாக தயார் செய்துள்ளது. அதுமட்டுமன்றி இவர்கள் அனைவரும் தாய்லாந்தின் தேசிய கண்டுபிடிப்பாளர் தினக் கொண்டாட்டங்களிகளிலும் பங்குபற்றவுள்ளனர்.

வினோஜ்குமாரின் இதுவரையான 86 கண்டுபிடிப்புக்களுக்காக 38 தேசிய விருதுகளையும், மூன்று சர்வதேச விருதுகளையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.