வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!!

376

மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி

வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமானதிலிருந்து ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு பாடசாலைகளில் வழங்கப்படும் சத்துணவுத் திட்டத்தினூடான பகல் உணவு வழங்கப்படவில்லை என்று பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இவ்வருடம் பாடசாலை ஆரம்பமான திகதியிலிருந்து பகல் உணவு வழங்கப்படவில்லை. குறித்த பாடசாலையிலிருந்து அதிபர் விலகியுள்ளதுடன் தற்போது பதில் அதிபர் கடமையாற்றி வருகின்றார்.

பதில் அதிபரிடம் இவ்விடயம் குறித்து கேட்டபோது, மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதற்கு வவுனியா தெற்கு கல்வி வலயத்திலிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இது குறித்து பல கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது .

அங்குள்ள உணவு அதிகாரி சுகயீனம் காரணமாக விடுமுறையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கு பகல் உணவு வழங்குமாறு கோரி நேற்றும் கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எமக்கு அனுமதி வழங்கினாலே நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று பதில் அதிபர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து வவுனியா தெற்கு கல்வி வலயப்பணிப்பாளர் முத்து இராதாகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டபோது,  அப்பாடசாலையின் அதிபர் அங்கிருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள நெருக்கடியே பகல் உணவு வழங்காமைக்கான காரணம். தற்போது அதை சீர் செய்வதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

இன்னும் சில தினங்களில் உணவு வழங்கும் நடவடிக்கை சீர் செய்யப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.