சர்ச்சைகளுடன் முடிந்த வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம்!!(படங்கள்)

356

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்‌தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெறவிருந்தது .

பாடசாலை அதிபரினால் பாடசாலை கட்டடம் கூட்டத்திற்காக வழங்கப்படாத நிலையில் இப் பாடசாலையில் பழைய மாணவர்கள் பலர் நீண்ட நேரம் பாடசாலை வாயிலின் முன்பாக வீதியில் காவல் நின்றதையும் அதன் பின்னர் வீதியில் பந்தல் அமைத்து சற்று தாமதமாக 11 மணியளவில் கூட்டம் நடைபெற்றதையும் காணக்கூடியதாகவிருந்தது.

இது தொடர்பாக வவுனியா நெற் இணையம் பாடசாலை அதிபர் திரு.தனபாலசிங்கம் அவர்களை தொடர்புகொண்டு கேட்டபோது..

இப் பழைய மாணவர் சங்கமானது சட்டத்துக்கு முரணாக அமைக்கப்பட்ட அமைப்பு என்றும். இவர்களிடம் கடந்தகாலங்களில் செயற்பட்டதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்றும் இதனால் இவர்களுக்கு பாடசாலை மண்டபத்திற்குள் கூட்டம் நடாத்துவதற்கான அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் வரும் ஜனவரி மாதம் சட்ட ரீதியான பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் என்ற வகையில் தான் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இது சம்பந்தமாக பழைய மாணவர் சங்கத்தின் உப தலைவர் திரு.சோமகாந்தனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது..

கூட்டம் நடாத்துவதற்கான அனுமதியை முதலில் பாடசாலை அதிபர் வழங்கியதாகவும் பின்னர் அதற்கு முரணாக இறுதிக்கட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பழைய மாணவர் சங்கம் கடந்தகாலங்களில் செயற்பட்டதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பாடசாலை மட்டத்தில் ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கான விளக்கம் கேட்கவே தீர்மானித்திருந்தோம். ஆனால் அதற்கு பதிலளிக்க முடியாமல் போகும் என்பதாலேயே எமது கூட்டத்தை நடாத்த அனுமதி மறுத்ததாக தெரிவித்தார்.

மேலும் தமக்கு சார்பான பழைய மாணவர் சங்கம் ஒன்றை அமைப்பதற்கு பாடசாலை அதிபர் முயற்சிப்பதாகவும் இதனாலேயே தம்மை சட்டவிரோத அமைப்பாக காட்ட முயல்வதாகவும் தெரிவித்தார்.

ஒரு பாடசாலையின் அபிவிருத்தியில் பழைய மாணவர்களின் பங்கு இன்றியமையாதது. இந்நிலையில் பாடசாலை அதிபரும் பழைய மாணவர்களும் முரண்படுவது பிரதேச மக்கள் மற்றும் கல்வியலாளர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

12 3 4 5 6 7 8 9 10 11