வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பும் அறிமுக நிகழ்வும்!!

1017

 

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் வரவேற்பு நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் தவிசாளர் இ.நவரட்ணம் தலைமையில் இலாங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நீதி அமைச்சின் கீழ் மத்தியஸ்தர் சபை ஆணைக்குழுவினால் வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி உரிமை, உடமை மாற்றம் மற்றும் காணிப் பிணக்குகள் தொடர்பான பிரச்சனைக்களுக்கு விரைவாக தீர்வு காணும் பொருட்டு 45 பேர் மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த உறுப்பினர்களை மாவட்ட அரச அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு அறிமுகப்படுத்தி காணி மத்தியஸ்தர்களை வரவேற்று காணி பிணக்கு விசாரணைகளை ஆரம்பிக்கும் முகமாக குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது முதற்கட்டமாக 15 காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணப்பதற்கான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் ஐ.எம்.ஹனீபா, விசேட காணி மத்தியஸ் சபை ஆணைக்குழுவின் ஆலோசகர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.திருநாவுக்கரசு, ஆசியான் நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எம்.ஜயந்த, நீதி அமைச்சின் மாவட்ட உத்தியோகத்தர் எஸ்.விமலராஜா, வவுனியா பிரதேச செயலாளார் கா.உதயராஜா, வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளார் க.சிவகரன், வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலளர் த.தர்மேந்திரா, பொலிஸ் அதிகாரிகள் பொது மக்கள் எனவும் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இதேவேளை, வவுனியா மாவட்ட காணி மத்தியஸ்தர் சபையிடம் 400 இற்கும் மேற்பட்ட முறைப்பகாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.