போலீஸ் என்று கூறி நடிகர் மயில்சாமியிடம் 50 ஆயிரம் ரூபா கேட்டு மிரட்டிய பெண்!!

353

myilதூள், உத்தமபுத்திரன், கில்லி, ரெண்டு, மாயாண்டி குடும்பத்தார் உள்பட பல தமிழ் படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் மயில்சாமி. இவரது வீடு வடபழனி சாலிகிராமத்தில் உள்ளது.

இவரது செல்போனுக்கு நேற்று காலை மிஸ் கோல் ஒன்று வந்தது. மாலையில் அந்த நம்பரில் மயில்சாமி தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் ஒரு ஆண் பேசினார். அவர் பேசும் போது நான் போலீஸ்காரர் விபசார வழக்கில் ஒரு பெண்ணை பிடித்து உள்ளேன். அவரது செல்போனில் உங்கள் செல்போன் நம்பர் உள்ளது. 50 ஆயிரம் கொடுத்தால் இந்த விஷயத்தை வெளியில் தெரியாமல் மறைத்து விடுவேன் என்றார்.

அப்போது அந்த போனில் ஒரு பெண் பேசினார். அவர் கூறும்போது, போலீஸ்காரர் கூறியபடி இன்றே பணத்தை கொடுத்து விடுங்கள் என்றார்.

உடனே மயில்சாமி என்னிடம் எந்த போலீசாரும் வந்தது இல்லை. நீங்கள் யார் என்று கேட்டார். உடனே அந்த பெண் செல்போனை துண்டித்து விட்டார். இதுகுறித்து நடிகர் மயில்சாமி இன்று விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது..

எனக்கு தினமும் ஏராளமானவர்கள் போன் பண்ணுவார்கள். படப்பிடிப்பில் இருக்கும்போது என்னால் பேசமுடியாது. இதனால் மாலை நேரத்தில் எனது போனுக்கு வந்த நம்பருக்கு நானே தொடர்பு கொண்டு பேசுவேன். பலர் என்னிடம் உதவி கேட்பது உண்டு.

கடந்த மாதம் கும்பகோணத்தைச் சேர்ந்த பெண்ணின் கஷ்டத்தை தீர்க்க 10 ஆயிரம் அனுப்பினேன். நேற்றும் செல்போனில் பதிவான 10க்கும் மேற்பட்ட நம்பர்களில் பேசினேன். இந்த குறிப்பிட்ட நம்பரில் பேசிய ஆணும், பெண்ணும் 50 ஆயிரம் தர வேண்டும். இல்லையேல் உங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விடுவேன் என்கிற ரீதியில் மிரட்டினார்கள்.

எனவே இதுபற்றி போலீசில் புகார் செய்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன் என்று அவர் கூறினார்.

போலீசார் அந்த நம்பருடன் தொடர்புகொண்டபோது சுவிட்ச் ஓப் என பதில் கிடைத்தது. என்றாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.