சொந்தக் காணிகளில் இருந்து நாங்கள் வெளியேறி இன்றுடன் 11 வருடங்கள் ஆன போதும் நாம் இன்று வரையிலும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை என கேப்பாப்புலவில் தாய் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
தமது பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் மீள கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் 700 நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு – கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தினை தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது இரண்டரை ஏக்கர் காணியை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் போதும் அதனை அவர்கள் மீள கையளிக்கவில்லை என கேப்பாப்புலவை சேர்ந்த பாலகிருஸ்னன் யோகஸ்வரி என்பவர் கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
தனது சொந்த நிலத்தை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எனது தாயார் சென்ற ஆண்டில் உயிரிழந்துள்ளார்.
குறித்த காணி தற்பொழுதும் வளமுடன் வருமானம் தரக்கூடியாத உள்ளது. எனினும் நான் வாடகை வீடு ஒன்றில் குடியிருக்கின்றேன்.
தொடர்ச்சியாக வீதியோரத்தில் இருக்க இயலாது எம்மால் முடியாது. எமது சொந்த நிலத்தை படையினர் மீள கையளிக்க வேண்டும் என உருக்கமான கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.





