யாழ் உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த நபர்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த நபருக்கு எதிராக 13 முறைப்பாடுகள்!!

720

cheatingதொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்த, சந்தேக நபருக்கு எதிராக நேற்று வரை 13 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.

மலேசியா, தாய்லாந்து நாடுகளில் கப்பல்களில் தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறியே பெருமளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. 13 முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபர் 50 லட்சம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தேக நபர் நேற்று முன்தினம் பெப்பிலியான பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். 39 வயதான இந்த நபர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நுகேகொடையில் போலி வெளிநாட்டு முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த நபர் கப்பல்களில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரை மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு அனுப்பிய போதும் அவர்கள் தொழில் இல்லாமல் அந்நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு, தெஹிவளை மற்றும் மாத்தளை உட்பட பல பிரதேசங்களை சேர்ந்த நபர்களை ஏமாற்றி இந்த நபர் பணத்தை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.