உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த கைகுலுக்கல்!!

298

obama_raul-castroதென்னாப்பிரிக்க முன்னாள் அதிபரும், நிறவெறி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நாட்டை வழிநடத்திச் சென்று தேசத்தந்தை என்று போற்றப்படுபவருமான நெல்சன் மண்டேலாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதியும், கியூப ஜனாதிபதியும் கைலாகு செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சிகரமான நிகழ்வாக கருதப்படுகிறது.

அமெரிக்காவும் கியூபாவும் அருகில் இருந்தாலும், பல ஆண்டுகாலமாக இருநாடுகளுக்கிடையே பனிப்போர் நிலவுகிறது.

முக்கியமாக கியூபா புரட்சிக்குப் பின் கம்யூனிஸ்ட் தலைவரான பிடல் கஸ்ட்ரோ அதிபரான இரண்டாவது ஆண்டில் (1961) இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான ராஜாங்க உறவுகளை முறித்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மேடை ஏறி பேசுவதற்கு முன்பாக ஒபாமா தாமாகவே முன்வந்து கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கினார்.

சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் எந்தவகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசுகையில்..

நியாயத்தை நிலைநாட்டிய வரலாற்றின் நாயகராக திகழும் மண்டேலாவை எவ்வளவு புகழ்ந்தாலும் போதாது. மகாத்மா காந்தியை போன்று போராட்டத்தை வழிநடத்தியவர் மண்டேலா. மார்ட்டின் லூதர் கிங்கை போன்று நிறவெறிக்கு எதிராக குரல் கொடுத்து நியாயத்துக்காக மண்டேலா போராடினார் என்றார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் கடைசி அதிபர் எஃப்.டபிள்யூ. டி கிளார்க், சீன துணை அதிபர் லீ யுவான்சாவோ, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாய், பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஹொலந்த், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டர், ஜார்ஜ் புஷ், பில் கிளின்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.