வவுனியாவில் ஹர்த்தால் தினத்தில் பொலிசாருடன் மாலையுடன் நின்ற தெற்கு பிரதேசசபை உறுப்பினர்!!

398

தெற்கு பிரதேசசபை உறுப்பினர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் கோரிக்கையை செவிசாய்காது ஹர்த்தால் தினத்தில் பொலிஸ் அதிகாரிகளுக்கு மாலை அணிந்து திறப்பு விழா நிகழ்வு ஒன்றை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் கோகுலகுமார் அஞ்சலாதேவி கொண்டாடியுள்ளமை தொடர்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும், வடக்கு மாகாணம் முழுவதும் நேற்று முன்தினம் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. அத்துடன் கிளிநொச்சியில் மாபெரும் கனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

இந்நிலையில் காணாமல் ஆக்கபட்ட உறவுகளின் கோரிக்கைகளை ஏற்று தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடு இன்றி அனைத்து இனத்தவர்களும், வர்த்தகர்களும், தனியார் மற்றும் இ.போ.சபை பேரூந்து சேவைகளும், முச்சக்கர வண்டிச் சேவைகளும் நேற்று முன்தினம் முற்றாக வவுனியாவில் செயலிழந்தன. வவுனியா நகரசபையின் சபை அமர்வு கூட நிறுத்தப்பட்டது. தனியார் கம்பனிகள் மூடப்பட்டதுடன் அரச அலுவலங்கள் கூட செயலிழந்திருந்தன.

இந்நிலையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேரச சபை உறுப்பினர் கோகுலகுமார் அஞ்சலாதேவி குறித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் குறித்தோ அல்லது ஹர்த்தால் குறித்தோ கவனம் செலுத்தாது ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பொலிசாருடன் இணைந்து மாலைகளுடன் ஆடம்பரமாக கொண்டாடியுள்ளமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று இருப்பதற்கு காரணம் விடுதலைப் புலிகளே. அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டமைக்காக பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அந்த பிள்ளைகளுக்காக நாம் போராடும் போது சில அரசியல்வாதிகள் ஆடம்பர நிகழ்வுகளை செய்வதும் எம்மை மேலும் மனவருத்தத்திற்குள்ளாகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த பிரதேச சபை உறுப்பினர் குறிப்பிட்ட தினத்தில் ஓமந்தை பகுதியில் புகையிரத கடவை ஒன்றை திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.