பன்றி இறைச்சியால் வந்த சிக்கல் : தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்!!

307

தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்

பன்றி இறைச்சியை களவாக எடுத்து உண்டு விட்டதாகத் தெரிவித்து உயர் பொலிஸ் அதிகாரியொருவர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். நுவரெலியாவில் அமைந்துள்ள பொலிஸ் சுற்றுலா விடுதியொன்றில் நேற்றைய தினம் இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் நலன்புரி பிரிவில் கடமையாற்றி வரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், உத்தியோகத்தர் ஒருவரை மோசமாக தாக்கியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது, சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 59 வயதான பொலிஸ் பரிசோதகர் தயானந்த அலஹப்பெரும என்ற உத்தியோகத்தரே சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் தமந்த விஜயஸ்ரீ, ஒரு கிலோ பன்றி இறைச்சியை கொண்டு வந்து கொடுத்து அதில் 500 கிராமை இரவு சமைக்குமாறு கோரியதாகவும் அதன் அடிப்படையில் தமக்கு கீழ் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்களைக் கொண்டு சமைத்துக் கொடுத்ததாகவும் தயனாந்த தெரிவித்துள்ளார்.

எனினும், சமையலறைக்கு வந்த பொலிஸ் அத்தியட்சகர் பன்றி இறைச்சி குறைவதாகவும் அதனை பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்து உண்டு விட்டதாகவும் குற்றம் சுமத்தி தம்மை மோசமாக தாக்கியதாக, பொலிஸ் உத்தியோகத்தர் தயானந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

உயர் அதிகாரிகள் வழங்கும் எந்தவொரு கட்டளையையும் தாம் ஏற்றுக்கொண்டு செயற்பட்டு வருவதாகவும், அவர்களது உணவை தாமே தமது உத்தியோகத்தர்களோ உட்கொள்ளவில்லை எனவும் பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.