வவுனியாவில் ஏற்றுமதியாளர்களை உருவாக்க தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்!!

360

தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் 2022ம் ஆண்டளவில் இலங்கையின் ஏற்றுமதி வருவாயை 28 பில்லியன் டொலர்களாக அதிகரித்தல், புதிய ஏற்றுமதியாளர்கள் இரண்டாயிரம் பேரை உருவாக்குதல் என்பனவற்றை நோக்கமாக்கொண்டு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ‘ஏற்றுமதியில் முதலிடத்தை பெறுங்கள்’ எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கும், தொழில்நுட்ப கண்காட்சியும் இன்று (01.03) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட தொழில் முனைவோருக்கான ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையில் செயலமர்வு நடைபெற்றிருந்தது.

முன்னதாக மாவட்டசெயலக வளாகத்தில் அமைக்கபட்டிருந்த தொழில்நுட்ப கண்காட்சி கூடத்தை நாடா வெட்டி திறந்து வைத்த அதிதிகள் அதனை பார்வையிட்டதுடன் கருத்தரங்கு நிகழ்வு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றிருந்தது.

ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தில் முதலாவது நிகழ்வானது யாழ்ப்பாணத்திலும் மற்றும் கண்டி, மாத்தறை, குருநாகல், கேகாலை, அனுராதபுரத்திலும் நடைபெற்று எழாவது கருத்தமர்வாக வவுனியாவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் தொழில் முயற்சியாளர்களுக்கான விழிப்புணர்வு வழங்கல், ஏற்றுமதித்துறையின் தொழில் நுட்பத்தை காட்சிபடுத்தல், பாடசாலை மாணவர்களுக்கு ஏற்றுமதித்துறை தொடர்பான அறிவை வழங்கல், முன்னிலை வகிக்கும் வர்த்தகர்களை ஏற்றுமதித் துறைக்குள் உள்வாங்குதல் போன்றவற்றுக்கான கலந்துரையாடல்கள் நடைபெற்றது.

நிகழ்வில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமர விக்கிரம, கைத்தொழில் வர்தக அமைச்சர் றிசாட்பதியூதீன், அபிவிருத்தி மூலோபாய பிரதி அமைச்சர் நளின்பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, வவுனியா, மன்னார் அரச அதிபர்களான எம். ஹனீபா, மோகன்ராஜ் அரசஅதிகாரிகள், வத்தகதுறையினர், வன்னி மாவட்டங்களை சேர்ந்த உற்பத்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.