ஊருக்கு திரும்பிப்போக அலறும் பாகிஸ்தான் வீரர்கள்..

436

pakistan

சம்பியன்ஸ் கிண்ண தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாலும், கடைசி போட்டியில் இந்தியாவிடம் தோற்றுப் போனதாலும் நாடு திரும்பினால் ரசிகர்களின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில் இங்கிலாந்திலிருந்து தாயகம் திரும்ப அஞ்சி இங்கிலாந்திலேயே தங்கியுள்ளனராம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்.

கடைசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் மிகவும் கசப்பானஒன்றாக மாறி விட்டது பாகிஸ்தானுக்கு. சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் இந்த வருடத்தோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. இனிமேல் இப்போட்டி நடைபெறாது.

எனவே இதை வென்று தாயகம் திரும்பும் வேகத்துடன் இங்கிலாந்து வந்திருந்தது பாகிஸ்தான். ஆனால் எதிர்பாராத வகையில் பெரும் அவமானத்துடன் தாயகம் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான். மோதிய மூன்று போட்டிகளிலுமே அந்த அணி தோல்வியைத் தழுவி விட்டது.

அதிலும் கடைசிப் போட்டியில் இந்தியாவிடம் தோற்று விட்டது. சம்பியன்ஸ் தொடரில் இதுவரை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதே கிடையது. ஆனால் முதல் முறையாக தோற்று விட்டது. பாகிஸ்தானின் இந்த மோசமான ஆட்டம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

இதனால் தாயகம் திரும்பினால் ரசிகர்களின் ஆவேச கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று பாகிஸ்தான் வீரர்கள் அஞ்சுகிறார்களாம். இதனால் இங்கிலாந்தை விட்டு புறப்பட சில வீரர்கள் தயக்கம் காட்டுகின்றனராம்.

அப்துல் ரஹ்மான், கம்ரன் அக்மல், வஹாப் ரியாஸ், அசாத் ஷபீக் மற்றும் முகமது இர்பான் ஆகியோர் மட்டுமே பாகிஸ்தான் திரும்பத் தயாராகி வருகின்றனராம். மற்றவர்கள் தாயகம் திரும்ப தயக்கம் காட்டுகின்றனராம்.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தரப்பில் கூறுகையில் மற்றவர்களும், பயிற்சியாளர் டேவ் வட்மோரும் டுபாய் வழியாக தாயகம் திரும்புவார்கள். பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்கள் சற்று தாமதமாக திரும்புவார்கள் என்று தெரிவித்தனர்.

அதேசமயம் பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் இங்கிலாந்திலேயே கொஞ்ச காலம் தங்கி லீக் போட்டிகளில் ஆட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தாமதங்களுக்கும் தயக்கத்திற்கும் பாகிஸ்தான் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகி விடுவதைத் தவிர்க்கவே என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இப்படி கேவலமாக தோற்றுத் திரும்பியபோதெல்லாம் ரசிகர்கள் ஆவேசத்துடன் வீரர்களைத் தாக்குவது, வீட்டைத் தாக்குவது, கொடும்பாவி கொளுத்துவது என்று நடந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.