இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : தப்பிப்பது எப்படி?

378

தப்பிப்பது எப்படி?

இலங்கையில் மனிதர்களை உருக்கும் கடுமையான வெப்பநிலை (Heat Stroke) ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது. இந்த நிலைமையில் இருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை சுகாதார பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதிக வெயில் ஏற்படும் போது வெளியில் செல்வதை குறைத்துக் கொள்ளுமாறும் அதிகளவான நீர் அருந்துமாறும் சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 

வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்வதனை கட்டாயமாக்கி கொள்ளுங்கள். வெப்பம் தாக்காத வகையில் கண்ணாடி மற்றும் தொப்பியை பயன்படுத்துங்கள், சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கும் கிறீம் வகைகளை உடலில் பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயம், கட்டட நிர்மாணம், வீதி அமைக்கும் பணிகளில் ஈடுபடுவோர் உடலை மறைக்கும் வகையில் லேசான நிறத்திலான ஆடைகளை பயன்படுத்துமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குளிரான நீரில் உடலை கழுவ வேண்டும் எனவும், நோய் பாதிப்பில்லாதவர்கள் தினசரி குளிப்பதும் நல்லதென சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிக வெப்பமான காலநிலை நிலவுவதனால் Heat Stroke என்ற தாக்கத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் மைதானங்களில் விளையாடுவதனை தவிர்க்க வேண்டும். வாகனங்களுக்குள் சிறுவர்களை நீண்ட நேரம் அமர வைப்பதனை தவிர்க்க வேண்டும். அதிகமான நீர் அருந்த வேண்டும். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் நீர் அருந்த வேண்டும். சிறுநீர் கழித்தவுடன் நீர் அருந்த வேண்டும். அதிக இனிப்பான குளிர்பானங்களை தவிர்க்கவும். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு நீர் கொண்டு செல்வது கட்டாயமாக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சருமத்தில் சிகப்பு நிற கொப்பளங்கள் ஏற்படும். சிகப்பு நிற சருமம் ஏற்பட்டு எரிச்சல் ஏற்படும். அதிக வியர்வை ஏற்படும். வாந்தி, மயக்கம், தலைவலி உட்பட பல நோய்த்தன்மை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.