மழை காரணமாக 3வது போட்டி கைவிடப்பட்டது : தொடரை தென் ஆபிரிக்கா கைப்பற்றியது!!

507

quinton_de_kockஇந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணிக்கு தொடக்க வீரர் குயின்டன் டி கோக் மற்றும் டி வில்லியர்ஸ் சதம் அடுத்துக் கைகொடுத்தனர். இதனால் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இந்த சுற்றுத்தொடரில் தென் ஆபிரிக்க இளம் வீரர் தொடர்ந்து மூன்று சதம் அடித்தமை சிறப்பம்சம்.

இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா 4, முகமது ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர். அபாரமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்தார்.

இந்திய அணி துடுப்பெடுத்தாடுவதற்கு முன்னர் மழை குறுக்கிட்டதால் போட்டி தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை பெய்தமையால் போட்டியை தொடர முடியாத காரணத்தால் போட்டி கைவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் தென் ஆப்பிரிக்க அணி 2-0 என தொடரை வென்றது.

தொடர்ந்து 3 சதம் அடித்து சாதனை

தென் ஆபிரிக்காவின் டி கோக் முதல் 2 ஆட்டங்களில் (135,106) சதம் அடித்திருந்தார். இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் ஆட்டத்திலும் அவர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 ஆட்டங்களில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் பாகிஸ்தானின் ஜகிர் அப்பாஸ், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 சதங்கள் அடித்திருந்தார்.

தவிர, தொடர்ந்து 3 சதங்கள் அடித்த மூன்றாவது தென் ஆப்பிரிக்க வீரர் டி கோக் என்பதும், ஒட்டுமொத்த வரிசையில் ஐந்தாவது வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் 300 ஓட்டங்கக்கு மேல் குவித்த மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்குமுன் நியூஸிலாந்தின் மார்டின் கப்டில், சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் 300க்கும் மேல் ஓட்டங்களை குவித்துள்ளனர்.