
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தன் தாயாரின் தொகுதியான ரேபரேலிக்கு ஆய்வு நடத்துவதற்காக சென்றிருந்தார். ஆய்வு முடிந்து செசன்னா வகை சொகுசு தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பினார்.
ராகுலின் தனி விமானம் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், அந்த விமானம் தரை இறங்க விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து அனுமதி கொடுக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தியின் விமான பைலட், அந்த விமானத்தை தரை இறக்க முயன்றார்.
அந்த சமயத்தில் அதே ஓடு பாதையில் இந்திய விமானப்படை விமானம் புறப்படுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த ராணுவ விமானம் மிகவும் மெதுவாக அந்த ஓடு பாதையில் சென்று கொண்டிருந்தது.
அதற்குள் ராகுல் விமானம் தரை இறங்க நெருங்கி விட்டது. வேகம் காரணமாக ராகுலின் விமானம் இந்திய விமானப்படை விமானம் மீது மோதி விடும் அபாயம் ஏற்பட்டது.
ஒரே ஓடு பாதையில் ராகுல் விமானமும், இராணுவ விமானமும் இருப்பதை கண்டதும், விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ராகுல் விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்டு, விமானத்தை தரை இறக்க வேண்டாம். மீண்டும் விமானத்தை மேலே கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்கள்.
ஆபத்தை உணர்ந்த ராகுல் விமான பைலட் மிகவும் வேகமாக செயல்பட்டு, அந்த விமானத்தை மேலே கிளப்பினார். இதனால் விமானங்கள் மோதி மிகப் பெரிய விபத்து ஏற்படுவது கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ராகுல் உயிர் தப்பினார்.
ராகுல் வந்த விமானம் விபத்தில் சிக்க இருந்ததை அறிந்த உயர் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி முழு விசாரணை நடத்த விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் புறப்பட்டுச் செல்ல அனுமதியளித்த கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள், அந்த விமானம் வேகமாக புறப்பட்டு சென்று விடும் என்று நினைத்து, அதே ஓடு பாதையில் ராகுல் வந்த விமானத்தை தரை இறக்க அனுமதி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு இராணுவ விமானம் ஏன் மெதுவாக சென்றது என்று தெரியவில்லை. அது பற்றிய அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.