வவுனியாவில் புதையல் தோண்டியவர்களுக்கு உதவிய பொலிசார் இருவர் கைது!!

390

பொலிசார் இருவர் கைது

வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுபாஸ்குமார ஆரியரத்ன மற்றும் விதான ஆகியோரே இன்று அதிகாலை 5.30 மணியளவில் வவுனியா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவில் நேற்று முனதினம் புதையல் தோண்டியவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸாரின் தொலைபேசி ஆய்வு விசாரணைகளின் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் தொலைபேசியில் உரையாடல் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு, ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மற்றைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இருவரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்க செல்லவில்லை.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்று அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சுபாஸ்குமார ஆரியத்தன, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய முன்னாள் உத்தியோகத்தர் விதான ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.