வடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றத் தடை?? : தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது : அரசாங்கம்!!

386

flagவடக்கு பாடசாலை நிகழ்வுகளில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் நடைபெறும் பாடசாலை நிகழ்வுகளின் போது தேசிய கொடியை ஏற்றக் கூடாது என சில பிரிவினைவாத தமிழ் அரசியல்வாதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பாடசாலை உயர் அதிகாரிகளுக்கு இவ்வாறு அரசியல்வாதிகள் உத்தரவிட்டுள்ளமை பற்றிய தகவல் கிட்டியுள்ளது என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உத்தரவிட்ட பிரிவினைவாத அரசியல்வாதிகள் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

வடக்கின் சகல நடவடிக்கைகளையும் வட மாகாணசபை நிர்வாகம் மேற்கொள்ளும் எனவும், பாடசாலை நிகழ்வுகளில் சிங்கக் கொடியையோ அல்லது கொழும்பு அதிகாரிகளையோ அழைக்க வேண்டியதில்லை என அரசியல்வாதிகள் சிலர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் சட்டங்களுக்கு எதிராக செயற்படும் குறித்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது : அரசாங்கம்..

தேசிய கொடிக்கு அவமரியாதை செய்யக் கூடாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசியக் கொடிக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் எவரேனும் செயற்பட்டால் அரசியல் அமைப்பின் அடிப்படையில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என உள்விவகார அமைச்சின் செயலாளர் பீ.பி.அபயகோன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையைச் சேர்ந்த சில அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வேண்டுமென்றே தேசிய கொடியை ஏற்ற மறுத்தமை தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
தேசிய கொடி தொடர்பில் ஏற்கனவே சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபத்திற்கு மேலதிகமாக புதிதாக சுற்று நிரூபமொன்று நினைவூட்டும் வகையில் வெளியிடப்பட உள்ளது.

அரசியல் அமைப்பை பேணுவதாகத் தெரிவித்து பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வட மாகாண அரசியல்வாதிகள் அதற்கு முரணாக செயற்பட்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்துமாறு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன தமக்கு ஆலோசனை வழங்கியதாக அபயகோன் தெரிவித்துள்ளார்.

தேசிய கொடி அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த தேசிய கொடியை பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தேசிய கொடி ஏற்றல் தொடர்பிலான வழிகாட்டல்கள் மாகாண ஆளுனர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.