வவுனியாவில் கத்திக் குத்து காயத்துடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் : மரணத்தின் காரணம் வெளியானது!!

705

மரணத்தின் காரணம் வெளியானது

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று (20.03.2019) அதிகாலை வெட்டுக் காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல்வீட்டுப் பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

காலையில் அயலவர்கள் வீட்டுக்குச்சென்றபோது, இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக் கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை. அவரை தேடி அறைக்குள் சென்றபோது, அங்கு இரத்தம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப் பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் கிணற்றிற்க்கு செல்லும் பாதையில் கத்தியொன்றை மீட்டெடுத்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது 32) என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா நீதிவான் திருமதி தஸ்னீம் பௌசான் மற்றும் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தம்மி லொவிஸ்லோவா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டனர். இதனையடுத்து சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கழுத்தில் கத்திக்குத்து காயம் இருந்தது. எனினும், இறப்பு காயத்தால் நிகழவில்லை. நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பெண் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.