150 வருடங்கள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை, விஷமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை இந்து காங்கிரஸ் கவலை வெளியிட்டுள்ளது.
பதுளை மாவட்டம் ஹாலி -எல உடுநுவர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்த அம்மன் சிலையே விஷமிகளால் உடைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உட்பட பொறுப்பு மிக்கவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவில்லை என அகில இலங்கை இந்து காங்கிரஸ் தலைவர் கந்தையா நீலகண்டன் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியமையானது இத்தகைய அழிவு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் விரும்பத்தகாத குற்றவாளிகள் ஊக்குவிக்கப்படுவதோடு குற்றச் செயல்கள் தொடர்வதற்கு வழிவகுக்கும்.
இலங்கையின் இந்து மக்களுக்கு தொடர்ச்சியான சங்கடத்தை ஏற்படுத்தி வருவதுடன் தெய்வச் சிலைகள் அழிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் ஆலயங்களில் இருக்கும் பெறுமதியான பொருட்கள் தொடர்ந்தும் கொள்ளையிடப்பட்டு வருகின்றது. இது மிகவும் துரதிஷ்டவசமான நிலைமையாகும் என அகில இலங்கை இந்து காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.