வவுனியா பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு!!

349

vavuniyaவட மாகாண மக்களின் சுகாதார நலன்கருதி தாடை, வாய் மற்றும் முக சத்திர சிகிச்சை பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பொது வைத்தியசாலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட சிகிச்சை பிரிவில் இதுவரை 30 குழந்தைகளுக்கான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சத்திர சிகிச்சைப் பிரிவில் சுமார் 30 வைத்திய அதிகாரிகள் கடமையாற்றுவதாக அதன் பணிப்பாளரும் சத்திர சிகிச்சை நிபுணருமான ரஞ்சன் மல்லவ ஆரச்சி தெரிவித்துள்ளார்

வாய், மூக்கு போன்ற அவயவங்களில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை உடனடியாக சிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலம் சிறந்த பலனை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாணத்திலுள்ள ஒரேயொரு தாடை, வாய், முக சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வாயில் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளை ஒரிரு மாதங்களுக்குள் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த முடியாமற்போகும் பட்சத்தில் அந்த குழந்தைகள் பேசும் திறனை இழப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் வைத்திய நிபுணர் ரஞ்சன் மல்லவ ஆரச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்றாவது தாடை, வாய் மற்றும் முக சிகிச்சை பிரிவு வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.