காணாமல் போனோரது உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு பரிந்துரை!!

824

Kaanamalஇலங்கையில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளினால் காணாமல்போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 148 பேர் தொடர்பான முறைப்பாடுகளை நேற்று (13) பெற்றுக்கொண்ட நிலையில் ஊடகங்களிடம் பேசும்போது ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம இதுபற்றி கூறினார்.

காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் போனால், அவர்களின் உறவினர்களுக்கு அவர்களில் தங்கி வாழ்ந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்வோம். சிலர் தகவல்களை வழங்க அச்சப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அப்படியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டால் எங்களிடம் மக்களை முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றார் மக்ஸ்வெல் பரணகம.

கொழும்பு கொஹுவலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அலுவலகத்தில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட பலர் தங்களின் காணாமல்போன உறவினர்கள் தொடர்பான முறைப்பாடுகளை செய்திருந்தனர்.



தங்களின் உறவினர்களை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த பலர் இங்கு முறைப்பாடு செய்தனர். தமது உறவினர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டனர்.

உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த முறைப்பாடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தது.

மூன்று ஆண்டுகளாக தென்னிலங்கையில் மட்டும் இயங்கிவந்த தங்களின் அமைப்பு, வடக்கிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் காணாமல்போனவர்களின் பிரச்சனை நிலவுவதால் அங்கும் சென்று பணியாற்றிவருவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த ஜயமான்ன தெரிவித்தார்.

-BBC தமிழ் –