மின்சார விநியோகத் துண்டிப்பு தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

571

மின்சார விநியோகத் துண்டிப்பு

எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு நேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் – மின்சார உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் மழை கிடைக்காவிடின் மின்சார உற்பத்தியில் பாரிய சிக்கல் ஏற்படக் கூடும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவசர மின்சார கொள்வனவிற்கு மின்சக்தி அமைச்சினால் தற்போதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சார பொறியிலாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

தற்போது நான்கு மணித்தியால மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சில பிரதேசங்களில் குறித்த நேரத்திற்கு அதிகமான நேரம் மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மின்சார துண்டிக்கப்படும் நேரம் மற்றும் பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை நேற்று மின்சக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, முன்பு செய்த பாவங்களின் காரணமாகவே தற்போது மின்சார விநியோகத் தடையை ஏற்படுத்த நேர்ந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலப்பகுதிவரை, கேள்விக்கு ஏற்றவாறு மின்சார உற்பத்தித்துறை அபிவிருத்தி செய்யப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நான்கு மணிநேர மின்சார விநியோகத் தடை காரணமாக, வர்த்தகத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு, இந்த மின்சார விநியோகத் தடையினால் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக குளிரூட்டியை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்படும் வர்த்தக நிலையங்களில், குளிரூட்டிகளிலிருந்து குறித்த பொருட்களை வெளியே அகற்ற வேண்டிய நிலைமையை அவதானிக்க முடிந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேநேரம், மின்சார விநியோகத் தடை காரணமாக பொதுமக்களும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டனர்.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் மே மாதத்திற்குள் போதியளவு மழை கிடைக்காவிடின் தொடர்ந்தும் மின்சார விநியோக துண்டிப்பு காலநேர அட்டவணையை நீடிக்க நேரிடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.