கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது!!

885

Kadamமானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசிய விருது வழங்கப்படவுள்ளது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மண்பாண்ட பொருட்கள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஊராகும்.

குறிப்பாக இங்கு தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடத்துக்கு தனி மவுசு உண்டு. இக்கடத்திலிருந்து கர்நாடக இசைக்கலைஞர்கள் விரும்பும் ஒலி கிடைப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மானாமதுரையில் கடம் தயாரிப்பில் ஒரு குடும்பத்தினர் மட்டுமே பாரம்பரியமாக ஈடுபட்டு உள்ளனர். மானாமதுரை குலாலர் தெருவில் வசிக்கும் அக்குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த கேசவன் மனைவி மீனாட்சி மத்திய அரசின் சங்கீத நாடக அகடாமி சார்பில் வழங்கப்படும் தேசிய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவுக்கு செல்ல மீனாட்சி தயாராகி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கணவர் கேசவன் கடம் தயாரிக்கும் பணி செய்து வந்தார் என்றும் அவரது மறைவுக்குப்பின் நானும் எனது மகன் ரமேசும் கடம் தயாரித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளார்.

சங்கீத நாடக அகாடமி சார்பில் மீனாட்சிக்கு விருதும் 1 லட்சம் பணப் பரிசு தொகையும் வழங்கப்படவுள்ளது.